Thursday, March 10, 2011

நானும் கூகுளும்..

முதல் பகுதி மறந்து போனவர்கள்.....

அத்துவான காடு போன்ற இடம், இதில் போலீஸ் வேறு. கன்னாபின்னாவென்று ரோஷம் வந்ததன் விளைவு எவ்வளவு டாலர்களோ தெரியாது. அப்படியே பூமி இரண்டாக பிளந்து இந்தக் காரை விழுங்கி விடக்கூடாதா என்று பலவாறாக புலம்பியபடி காரை மெதுவாக ரோட்டின் ஓரத்திற்கு ஓட்டிப் போனேன். போலீஸ் அவர் பாட்டுக்கு போய் விட்டார். என்னை விட பெரிய கேடிகள் ஊரில் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியுதல்லவா? போகும் போது கையால் ஏதோ சைகை செய்தார். நன்றின்னு சொன்னாரா இல்லை வேறொரு நாளில் உன்னைக் கவனிக்கிறேன் என்று சொன்னாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

ஒரு வழியா நான் போக வேண்டிய இடம் வந்தது. அந்த இடத்தினைக் கண்ட பரவசத்தில் நான் மெய்மறந்து சுற்றிச் சுற்றி வந்தேன். பார்க்கிங் கிடைக்கலைன்னா வேறு என்ன செய்வதாம். ஒருவர் காரை ரிவேர்சில் எடுக்க, வலது பக்கம் 2 கார்கள், இடது பக்கம் 2 கார்கள் காத்திருந்தன. சில இடங்களில் பனி மலை போல குவித்திருந்தார்கள். இரண்டு தடவை சுற்றிய பிறகு வாழ்க்கை வெறுத்து வீடு திரும்பினேன்.

நான் போய், தொலைந்து போகாமல் மீண்டு வந்த கதையை என் ஆ.காரர் நம்பவேயில்லை. இதுக்காக நான் போன இடத்திலிருந்து 2 எவிடென்ஸை கூட்டிட்டு வரமுடியுமா?
கூகிளாண்டவரின் மேப் பேப்பரில் நான் விட்ட பிழைகள், எங்கே திரும்ப வேண்டும் என்று விலாவாரியா எழுதி வைச்சு இருக்கிறது மட்டுமே சாட்சி. அதை எல்லாம் என் ஆ.காரரிடம் காட்டி, ஏன் சும்மா வெறும் வாய்க்கு அவல் குடுக்கணும் என்று எண்ணத்தில் அப்படியே விட்டுட்டேன்.

அமெரிக்கா வந்த புதிதில் இப்படி நானே புது இடங்களுக்கு போய் வருவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. பார்மஸியில் என் ஆ.காரர் ஏதாவது பொருளுக்கு காசு குடுக்கச் சொன்னாலே கண்ணீர் அருவியா கொட்டும்.
இன்று இப்படி வீரமான ஆளாக (!!) மாற்றியதில் என் கணவரின் பங்கும் உண்டு. இல்லாவிட்டால் எல்லாவற்றுக்கும் கணவரின் கையை எதிர்பார்த்துக் கொண்டு நிற்கும், தன்னம்பிக்கையே இல்லாத ஒரு சாதாரண குடும்ப பெண்ணாக வந்திருப்பேன்.
எல்லாப் புகழும் என் கணவருக்கே என் சொல்லி என் கதையினை முடிக்கிறேன்.